September 01, 2019

சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்

ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் தத்துவச்சிறப்பு உள்ளது. இதனை அறிந்துகொண்டால், அந்தப் பண்டிகையை கொண்டாடுவதில் உள்ள மகிழ்ச்சியும் பலனும் பன் மடங்கு அதிகரிக்கும். சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் அறிவும் ஆற்றலும். அறிவின் அடிப்படையில் ஆற்றல் பெற்றுவாழ்வில் வெற்றி பெற வேண்டும். அறிவுக்கான பண்டிகை சரஸ்வதிபூஜை. ஆற்றலுக்கும், ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் கல்வியும், கருவிகளும் அவசியம். எனவே, கல்வியைத் தரும் புத்தகங்களுக்கும், ஆற்றலைத் தரும் கருவிகளுக்கும் சரஸ்வதி பூஜை அன்று வழிபாடு நடக்கிறது.

இவை இரண்டின் வெற்றியைக்குறிப்பது அடுத்தநாள் விழாவான விஜயதசமி. அம்புபோட்டு சூரனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. அறிவு எனும் அம்பினால் உள்ளே அறியாமை, பொறாமை, கொடுமை, இயலாமை, மதியாமை, போன்ற சூரர்களை வெற்றி கொள்வது விஜயதசமி. இப்பண்டிகைகள் நவராத்திரி விழாவின் கடை நாட்களில் வருகிறது. நவ – ஒன்பது. ராத்திரி – இரவு. புரட்டாசி மாதம், அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது வளர்பிறை நாட்கள் இந்தப் பண்டிகைக்கான காலமாகும்.

அது ஏன் 11 நாள், 12 நாள், 15 நாள் என்றில்லாமல் 9 நாட்கள் கொண்டாட வேண்டும்? 9 என்பது மிக முக்கியமான எண். 9 க்கு மேல் எண் இல்லை. இதற்குப்பின்னால் எழுதப்படும் எந்த எண்ணையும் இதற்கு முன்னால் உள்ள எண்களின் இணைப்பில்தான் எழுதமுடியும். எனவே ஒன்பதுக்கு மேல் எண் இல்லை, நவராத்திரி பூஜைக்கு மேல் ஒருபூஜை இல்லை.
ஒன்பது என்பதின் தத்துவம்.

ஒன்பது என்கிற எண் பலதத்துவங்களை எடுத்து சொல்கிறது. நவமணிகள், நவரசங்கள், நவவித சம்பந்தம் என்று பல உள்ளன. அதைப்போலவே நவ இரவுகள் முக்கியம். இவற்றை ஒன்பது கூறுகளாக்கி படிப்படியாகப் பூஜை செய்தால், பத்தாவது கூறான வெற்றி விடியலை நோக்கி, பக்தர்களை அழைத்துச் செல்லும்.

மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியை ‘புல்லாகி பூடாகி புழுவாய் மரமுமாகி பல்மிருகமாகி என்று பாடுகிறார். இதனை உணர்த்துவதுபோல முதல் படியில் தாவரங்களில் தொடங்கி அடுத்தடுத்த படிகளில் விலங்குகள், மனிதர்கள், தேவர்கள், ரிஷிகள் என வளர்ச்சி நிலைகளை நோக்கியபயணமாக கொலுப்படிகள் அமைக்கப்படுகின்றன.

எல்லா உயிர்களையும் சமமாக மதித்து, வாழ்ந்து, தெய்வநிலையை நோக்கி மனிதன் உயரவேண்டும் என்பதை உணர்த்து வதற்காகத்தான் நவராத்திரி உற்சவங்கள் வீடுகளிலும், திருக்கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. நவராத்திரி விழா தமிழகத்தில் மட்டுமல்லாது உலகெங்கிலும் கொண்டாட பட்டுவரும் விழா. சைவம், வைணவம், சாக்தம் (சக்தி வழிபாடு) ஆகியவை சார்ந்த கோயில்களில் இது கொண்டாடப்படுகிறது. அதாவது சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள், அம்மன் ஆலயங்கள் ஆகிய ஆலயங்களில் கொண்டாடப் பட்டுவரும் விழா இது.

வைணவ ஆலயங்களான திருமலை, திருவரங்கம், திருவல்லிக்கேணி முதலிய ஆலயங்களில் தாயார் புறப்பாட்டோடு இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாகத் திருவரங்கத்தில் கொலு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது. சைவ ஆலயங்களிலும் அம்பாள் சன்னிதிகளிலும் விசேஷவழிபாடு நடந்து, சொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரிகள் எனச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப் பட்டுக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் உற்சவம் என்றபெயரில், தசரா விழாவாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இப்படி நாடே கொண்டாடும் நவராத்திரி விழா, நம்மிடமுள்ள இருட்டை, மயக்கத்தை, அறியாமையை, சக்தியின்மையை படிப்படியாக விலக்கி வெற்றியைநோக்கி அழைத்துச் செல்லும் திருவிழா என்பதே நவராத்திரியின் தத்துவம். நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்றுநாட்கள். அஷ்டமி, நவமி, தசமி.

சக்தியின் எல்லையற்ற வடிவம்
சக்தியின் எல்லையற்ற ஆற்றலின் வடிவம் துர்க்கை. துர்க்காஷ்டமி என்பது அஷ்டமியின் சிறப்பு. துர்க்கை கண்ணனின் தங்கை என ஸ்ரீமத்பாகவதம் கூறுகிறது. தீமையை அழிப்பதற்கு துர்க்கை தோன்றினாள். யஜூர் வேதத்தில் உள்ள துர்கா ஸூக்தம், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனைப் போக்கி, காப்பாற்றுவதற்கு நீ இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை என்று சொல்லி, துர்க்கையின் பெருமையை விளக்குகிறது.

அடுத்த நாள் நவமி. அன்று சரஸ்வதி தேவி வழிபாடு. சரஸ்வதி, படைப்புக் கடவுளான நான்முகனின் துணைவி. படைப்புக்கு அறிவும் ஆற்றலும் அவசியம் என்பதால் சரஸ்வதி பூஜையை நவமியில் கொண்டாடுகிறோம். அடுத்து தசமி. ஒன்பது நாட்களில் பெற்ற கூட்டு சக்தி வெளிப்பட்டு வெற்றி எனும் பலனைத் தரும் நாள் என்பதால் நவ அம்பிகைகளின் மொத்த வடிவம் சக்தி என்பது ஐதீகம்.
-₹₹₹-
Curtesy:cbk

No comments: