சமூகத்தின் மிகமிக
ஏழ்மையான குடும்பம். 8thக்கு மேல் படிக்கவில்லை. கிராமத்தில் அடிமை போல் தொழில்
செய்த முன்னோர்கள் வழியைப் பின்பற்ற மனமில்லை. வேறு தொழில் தெரியாது. எனவே,
அங்கே வாழப் பிடிக்காமல், காசு இல்லாததால், வித்-அவுட் டிக்கெட்டில் ரயிலேறி,
1981 ஜனவரி 26-ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
சென்னையில் யாரையும்
தெரியாது. பிளாட்பாரம் தான் வீடானது. கையில் காசும் கிடையாது. எழும்பூரைச் சுற்றி
உள்ள ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜென்ஸிகளில் வேலை கேட்டார். கிடைக்கவில்லை. ‘யார் அறிமுகமாவது இல்லாமல் வேலை தர முடியாது’
என துரத்தினர். *தோல்வி மேல் தோல்வி.* பிச்சைக்காரர்கள்,
தொழுநோயாளிகள், பிக்பாக்கெட்காரர்கள் என வேறு வழியின்றி அம் மனிதர்களோடு
பசியுடன் படுத்தார்.
ஒருநாள் இரவு பசி
மயக்கத்தில் எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்தபோது,
படாரென்று ஓர் அடி விழுந்தது. எழுந்தால்,
அங்கிருந்தவர்களை எல்லாம் சந்தேகக் கேஸ் போட போலீஸ்காரர்கள்
சுற்றி வளைத்தனர். ஜெயிலுக்குப் போவது நிச்சயமானது.
எனவே ஓடினார். போலீஸ் துரத்தியது. போலீஸால் அவ் இளைஞரைப் பிடிக்க
முடியவில்லை.
அவரது ஓட்டம்
அண்ணாசாலையில் ஓரிடத்தில் வந்து நின்றது. அங்கே பிளாட்பாரத்தில் சிலர்
படுத்திருந்தனர். இந்த இளைஞரும் பாதுகாப்புக்காக அவர்கள் அருகிலேயே படுத்தார்.
அசதியில் தூங்கி விட்டார். விடியற்காலையில், ஒருவர் அந்த இளைஞரை எழுப்பி, ‘‘தம்பி, இந்த இடத்தை எனக்குத் தர்றியா?
பணம் தருகிறேன்’’ என்றார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தயக்கத்துடன் ‘‘எவ்வளவு?’’ என கேட்டார். ‘‘2 ரூபாய்’’ என்றார்.
என்ன பகுதி இது என
நிமிர்ந்து பார்த்தால், ‘அமெரிக்கத் துணைத் தூதரகம்’ என போர்டு. அமெரிக்க விசாவுக்காக வருபவர்களுக்கு பிளாட்பார
கியூவில் இடம்பிடித்துக் கொடுத்தால் பணம் கிடைக்கும் எனத் தெரிந்ததும் இன்ப
அதிர்ச்சி. *அந்த ரூ.2 தான் சென்னையில் அவரது முதல் வருமானம். அந்த ரூ.2ல் பசியாறச் சாப்பிட்ட சாப்பாடு தான் அவரது வாழ்க்கையில்
மறக்க முடியாத ருசியான முதல் சாப்பாடு.* பிளாட்பாரத்தில் இடம்பிடித்துக்
கொடுப்பதையே தொழிலாகச் செய்ய முடிவெடுத்தார். சாயங்காலமே வந்து இடம்பிடித்துக்
கொடுத்தார். ஆங்காங்கே துண்டுபோட்டு இடம்பிடித்தார் ரூ.2 நான்கானது. ரூ.4,
8, 10
இப்படித்தான் ஆரம்பித்தது அவரின் வாழ்க்கை.
ட்ராவல்
ஏஜென்டுகளிடமிருந்து பயண டிக்கெட் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
பயணச்சீட்டை வாங்க மக்களை டிராவல்ஸுக்கு அழைத்துச் செல்வார். *தனக்குக் கிடைத்த
கமிஷனில் சிறிது மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை
வாடிக்கையாளருக்கே கொடுத்து விடுவார்.* இதனால் பல பயணிகள் அவரைத் தேடிவர
ஆரம்பித்தார்கள்.
ட்ராவல்
ஏஜென்டுகளுக்கு நம்பிக்கையான ஊழியராகவும், பயணிகளுக்கு ஓடி ஓடி உதவும் நண்பராகவும் வளர்ந்தார். கிடைத்த வாய்ப்புகளைப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன்
வெறித்தனமாக மிக உழைத்தார்.
*அப்போது நடந்த ஒரு
நெஞ்சைத் தொடும் சம்பவத்தை அவரே விவரிக்கிறார்,* படியுங்கள்: ‘‘1980- களில் இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கப்பல்
போக்குவரத்து நடந்தது. பயணிகளுக்கான விசா, பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவற்றை ராமேஸ்வரத்தில் சென்று கொடுக்கும்
பணியை ஒரு ட்ராவல்ஸ் நிறுவனம் எனக்கு வழங்கியது. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில்
கிளம்பினேன். ரயில், மண்டபம் ஸ்டேஷனில் நின்று விட்டது. வண்டி,
மேலே போகாது என சொல்லி விட்டார்கள். நான் அங்குள்ள
ஏஜென்டிடம் விசா, பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவற்றை கொடுத்தால்தான்,
அன்று பயணிகள் கப்பல் ஏற முடியும். விடியற்காலை மணி
ஐந்தானது. திடீரென ஒரு யோசனை வந்தது.
பாம்பன் பாலத்தில்
இரண்டு பக்கமும் தண்டவாளம் இருக்கும். நடுவில் ஸ்லீப்பர் கட்டை இருக்கும்.
கருங்கல் ஜல்லி இருக்கும். அதில் காலை வைத்து நடந்தால் 2 மணி நேரத்தில் போய்விடலாம் என்று தோன்றியது. தைரியத்தில்
பையை முதுகில் சுமந்துகொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பார்த்தால்,
உயரமான பாலத்துக்கு இடையே தூண்கள்,
ஸ்லீப்பர் கட்டை, தண்டவாளம் எல்லாம் இருக்கிறது. ஆனால் கருங்கல் ஜல்லி இல்லை.
இடைவெளிதான் இருக்கிறது. சரி, ஸ்லீப்பரில் நடக்கலாம் என நினைத்து,
பாலம் இரண்டாகப் பிரியும் பகுதிவரை வந்து விட்டேன். அதற்கு
மேல் ஸ்லீப்பர் கட்டைகளில் ஒரே க்ரீஸ். கால் வழுக்குகிறது. காற்று வேறு,
புயல்போல வீசுகிறது. கீழே அலை,
உயரமாக எழும்பித் தண்டவாளத்தைத் தாக்குகிறது. உடல் எல்லாம்
நனைந்து விட்டது. முதுகில் பாரம் வேறு. என்னால் நிற்கவே முடியவில்லை. சிறிது
சறுக்கினாலும் அவ்வளவுதான். வாழ்க்கையே முடிந்துவிடும்.
என்ன ஆனாலும் சரி
என்ற உறுதியுடன் அப்படியே தண்டவாளத்தின் மீது படுத்து,
அதில் கைகளையும் ஸ்லீப்பரில் கால்களையும் வைத்து மாறிமாறித்
தண்டவாளத்தைப் பற்றிக்கொண்டு தவழ்ந்து செல்ல ஆரம்பித்தேன். அப்படியே தவழ்ந்து
தவழ்ந்து பாம்பன் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து நான்
துறைமுகம் செல்லும்போது மணி 11 ஆகிவிட்டது. 12 மணிக்கு கப்பல் புறப்பட்டுவிடும்.
என்னைப் பார்த்ததும்
எங்கள் ஏஜென்ட் ஓடிவந்தார். நான் பையைக் கொடுத்ததும் என்னைத் திரும்பிக்கூடப்
பார்க்காமல் அங்கே காத்துக்கொண்டு இருந்தவர்களிடம் கொடுத்து,
அவர்களைக் கப்பலில் ஏற்றினார். மற்ற ஏஜென்டுகள் என்னைச்
சூழ்ந்து கொண்டனர். நான் நடந்ததைச் சொன்னேன். அவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சர்யம்.
என் முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். எனக்கு வணிக வாய்ப்புகளை வாரி
வழங்கினார்கள்.
*_சோதனைகள் தான்
வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்த நாள் அது.’_*👍🏻
தான் கற்றுக்கொண்ட
அனுபவங்களை படிக்கட்டுகளாக்கி, 1986 ஜனவரி 17-ல் சென்னை, மண்ணாடியில் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார் *‘மதுரா டிராவல்ஸ்’ அதிபர் வீ.கே.டி.பாலன்.* ரூ.1,500 வாடகையுடன் தனது நிறுவனத்தைத் தொடங்கிய அவர் இன்று சொந்தக்
கட்டடத்தில் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வணிகம் செய்யும் மாபெரும் நிறுவனமாகத்
தனது நிறுவனத்தை வளர்த்துள்ளார். மதுரா டிராவல்ஸ் இப்போது IATA
Approved Travel Agency. எல்லா நாடுகளின்
தூதரகங்களும் இந்த நிறுவனத்தை அங்கீகரித்துள்ளன.
*1981-ல் சென்னைக்கு
ரயிலில் ‘வித்-அவுட்’ டிக்கெட்டில் வந்தார் பாலன். இன்றும் அவர் ‘வித்-அவுட்’ டிக்கெட்தான் – 😀😀
ஆனால் விமானத்தில்.* ஆம். அவர் இன்று,
எந்த நகருக்குச் செல்வதாக இருந்தாலும்,
டிக்கெட் தேவைப்படாத சிறப்பு விருந்தினராக அவரை ஏற்றிச்
சென்று எல்லா விமான நிறுவனங்களும்
கெளரவிக்கின்றன.
இளைஞர்களுக்கு
நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்றபோது, நொடியும் தயங்காமல் அவர் சொன்னார்: *‘‘நாணயம் – நன்றி* இவை இரண்டும் எனது மந்திரச் சொற்கள்.
1) *நாணயம் என்பது ‘சொன்னதைச் செய், செய்வதைச் சொல்.’* 2) *உதவி செய்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேடித்தேடி
நன்றியுடன் உதவும் முக்கிய பண்பு*. *நாணயம், நன்றி என்ற இவ்விரண்டுமிருந்தால்,
தோல்விகள் எல்லாம்
தோற்று ஓடிவிடும்.*தோல்விகளைத் தோற்கடியுங்கள்’
எனகி்றார். 👍🏻
*_இன்று பல நாடுகளையும்
சுற்றிவரும் ஒரு பெரும் தொழிலதிபர், பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகங்கள் கொண்ட திரு.வீ.கே.டி.பாலனின்
வாழ்க்கை நம் அனைவருக்கும் கற்றுத்தரும் ஒரு நல்லதொரு பாடம்._*
No comments:
Post a Comment